அண்: வா தம்பி நல்லாயிருக்கியா? ஆமா இது என்ன மூட்டை? எங்கே கொண்டுட்டு போறே?
தம்பி: இதுவாண்ணே, என் பிரண்டு ஒருத்தன் கஷ்டப்படுறான். உடுத்த ஏதாவது டிரெஸ் இருந்தா குடுன்னு கேட்டான் அதான் நான் யூஸ் பண்ணிய பழைய டிரெஸ், குட்டையா போனது அப்புறம் கிப்டா வந்து எனக்கு பிடிக்காதது இத எல்லாத்தையும் கொண்டு கொடுக்க போறேன். பாவம், ஹெல்ப் பண்ணலாம்னுதான்…
அண்: ஏம்பா இதெல்லாம் போய் உன் பிரண்டுக்கு கொடுக்குற?
தம்பி: ஏண்ணே நீங்களே இப்படி சொல்றீங்க, உதவிதானே செய்றேன். நீதிமொழிகள் 19:17ல ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்னு சொல்லியிருக்குல அண்ணே.
அண்: அட அது இல்லப்பா. கட்டாயம் உதவவேண்டும், ஆனா அதுக்காக பழைய, குட்டையான, உனக்குப்பிடிக்காத டிரெஸ்ஸெல்லாம் கொடுக்குறீயே அத சொன்னேன்.
தம்பி: அதுல என்னண்ணே இருக்கு. எப்படிக் கொடுத்தாலும் உதவிதானே? எப்படியும் பிரயோஜனமாக இருக்குமே.
அண்: லூக்கா 3:11ல இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்னு இயேசு சொல்றார்ல
தம்பி: அதத்தாண்ணே நானும் செய்றேன், நா ரெண்டுக்கும் மேல நிறைய டிரஸ் கொடுக்கிறேனே
அண்: அப்படி இல்லப்பா. இயேசு என்ன சொல்றார்னா, தன்னைப்போலவே பிறனையும் நேசின்னு சொல்றாரு. நீ விரும்புகிற டிரஸ்ல அதிகமா இருந்துச்சின்னா அதுல இருந்து கொடுன்னு சொல்றாரே தவிர நீயே போட விரும்பாத டிரஸ்ஸ கொடுக்கிறது, தன்னைபோல பிறனை நேசிக்கிறதாகவே இல்ல.
தம்பி: ஒண்ணுமே இல்லாதவனுக்கு எது கொடுத்தாலும் உதவிதானண்ணே? அட்லீஸ்ட் உடுத்த டிரஸ் கிடைக்குதே
அண்: தனக்குப்போக தானம் என்பது பழமொழி. தனக்கு இருப்பதுல தானம் என்பது பைபுள்மொழி. மத்தேயு 25:36ல வஸ்திரமில்லாதிருந்தேன் எனக்கு வஸ்திரம் கொடுத்தீர்கள் என்று இயேசு சொன்னபோது. மிகவும் சிறியவனாகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச்செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்களென்று சொன்னார். அப்படின்னா நீ கொடுக்க இருக்கிற இந்த பழைய, குட்டையான பிடிக்காத டிரஸ்ஸெல்லாம் இயேசுவுக்குதான். இயேசுவுக்கு இப்படிப்பட்ட டிரஸ்ஸதான் கொடுப்பியா? அப்படின்னா உன் பிரண்டுக்கும் கொடுப்பா
தம்பி: அது வந்து… எப்படியாவது எத கொடுத்தாலும் அது உதவின்னு நினைச்சிக்கிட்டு இருந்தேண்ணே. ஆனா, கேட்கிறவுங்களுக்கு தனக்கு புடிச்சதுல இருந்து கொடுக்கிறதுதான் உண்மையாகவே தன்னைப் போல பிறனையும் நேசிக்கிறதுன்னு புரிஞ்சுதுண்ணே. என் கிட்ட எனக்கு புடிச்ச நல்ல டிரஸ் நிறைய இருக்கு அதுக்கும்மேலா புது டிரஸ்சும் என் பிரண்டுக்கு புடிச்ச மாதிரி எடுத்து கொடுக்க போறேண்ணே.
அண்: ஓ, புது டிரஸ்சும் கொடுக்க போறியா. ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி, சரி அப்புறம் பார்க்கலாம்.
இந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.